தூத்துக்குடி மாவட்டம் வைப்பாறு அருகே உள்ள கலைஞானபுரம் பகுதியில் வருவாய்த்துறை செயலாளர் ககன்தீப்சிங் பெடி கடற்கரை மணல்குவாரியை ஆய்வு செய்த போது எடுத்த படம். அருகில் மாவட்ட கலெக்டர் எம்.ரவிக்குமார் உள்ளார்.
http://www.dailythanthi.com/node/414856
தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரை தாது மணல் குவாரிகளில் ஆய்வு தொடங்கியது 6 இடங்களில் சோதனை
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 இடங்களில் கடற்கரை தாது மணல் குவாரிகளில் நேற்று காலை ஆய்வு தொடங்கியது.
கடல் மணல்
தூத்துக்குடி மாவட்டத்தில் கீழவைப்பார், இ.பெரியசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் மணல் முறைகேடாக அள்ளப்படுவதாக மீனவர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்ட வைப்பாறு, வேம்பார், பெரியசாமிபுரம் மற்றும் அருகில் உள்ள கடலோர கிராமங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் வைப்பாறு கிராமத்துக்கு உட்பட்ட கடற்கரை பகுதிகளில் ஒரு தனியார் நிறுவனம் அனுமதியின்றி அரசு புறம்போக்கு நிலம் மற்றும் நில அளவை செய்யப்படாத பகுதிகளில் உள்ள கடற்கரையில் 2 முதல் 10 அடி ஆழம் தோண்டி, சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை மணல் அள்ளி முறைகேடுகளில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.
இதில் மொத்தம் 85 ஆயிரத்து 611 கனஅடி அளவிலான பரப்பில் இருந்து 2 லட்சத்து 39 ஆயிரத்து 712 மெட்ரிக் டன் அளவிலான கனிமங்கள் முறைகேடாக அள்ளப்பட்டு இருப்பதாகவும், அரசுக்கு ஏற்படுத்தப்பட்டு உள்ள நிதியிழப்பு தொடர்பான விவரங்கள் குறித்து கணக்கிடும் பணி நடந்து வருகிறது என்றும் அப்போதைய கலெக்டர் ஆஷிஷ்குமார் தெரிவித்தார். இது தொடர்பாக கனிமவளத்துறை ஆணையருக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.
குழு நியமனம்
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரை தாதுமணல் குவாரிகளில் முறைகேடுகள் நடந்து உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக வருவாய்த்துறை செயலாளர் ககன்தீப் சிங் பெடி தலைமையிலான குழுவை முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதன்பேரில் வருவாய்த்துறை செயலாளர் ககன்தீப்சிங் பெடி தலைமையில் 25 பேர் அடங்கிய குழு தேர்வு செய்யப்பட்டது. இந்த குழுவினர் தூத்துக்குடிக்கு வரத்தொடங்கினர். குழு தலைவர் ககன்தீப்சிங் பெடி நேற்று காலை விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். காலை 10–15 மணி அளவில் மாவட்ட கலெக்டரின் முகாம் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார்.
அங்கு குழு உறுப்பினர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் 6 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுவினர் வேம்பார், வைப்பார், மணப்பாடு, மாதவன் குறிச்சி, பெரியதாழை, படுக்கப்பத்து ஆகிய இடங்களில் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் தனித்தனி வாகனங்களில் ஆய்வு செய்ய புறப்பட்டனர்.
6 இடங்களில் ஆய்வு
கலைஞானபுரம், பெரியசாமிபுரம் பகுதிகளில் வருவாய்த்துறை செயலாளர் ககன்தீப்சிங் பெடி, மாவட்ட கலெக்டர் எம்.ரவிக்குமார் ஆகியோர் முன்னிலையில் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மொத்தம் 6 இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் போது, மணல் குவாரிகளில் எவ்வளவு பரப்பு மற்றும் ஆழத்தில் மணல் அள்ளப்பட்டு உள்ளது. மணல் அள்ளப்பட்டு உள்ள இடம் புறம்போக்கு நிலமா? பட்டா நிலமா? என்பது உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர். இதற்கான ஆவணங்களையும் பார்வையிட்டனர்.
முன்னதாக வருவாய்த்துறை செயலாளர் ககன்தீப்சிங் பெடி மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறும் போது ‘‘முதல்–அமைச்சர் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரை மணல் குவாரிகளில் ஆய்வு செய்வதற்காக எனது தலைமையிலான குழு வந்து உள்ளது. 3 நாட்கள் ஆய்வு நடைபெறும். அடுத்த வாரத்தில் 2 நாட்கள் ஆய்வு செய்யப்படும். தேவையின் அடிப்படையில் பின்னர் மீண்டும் ஆய்வு செய்யப்படலாம். இந்த ஆய்வு உரிய நேரத்தில் முடிக்கப்பட்டு முதல்–அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதே நேரத்தில் ஆவணங்களை சென்னை மற்றும் தூத்துக்குடியில் வைத்து ஆய்வு செய்யப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குவாரிகளில் மட்டுமே ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆய்வின் போது, இதில் சம்பந்தப்பட்ட மீனவர்கள், குவாரி உரிமையாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.
தொடர்புடைய செய்திகள்
- தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரை தாது மணல் குவாரிகளில் ஆய்வு தொடங்கியது 6 இடங்களில் சோதனை
- தூத்துக்குடி மாவட்ட முன்னாள் கலெக்டர் ஆஷிஷ்குமார் மீது விசாரணை நடத்த வேண்டும் வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் நடராஜன் பேட்டி
- தூத்துக்குடியில் மெகா மக்கள் கோர்ட்டு வருகிற 31–ந் தேதி நடக்கிறது
- கோரம்பள்ளம் குளத்துக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் மனு
- கோவில்பட்டியில் மகனை அரிவாளால் வெட்டிய தந்தை கைது
- தாது மணல் ஆய்வக சிறப்பு குழு இன்று 6 இடங்களில் ஆய்வு
- தூத்துக்குடி மாவட்டத்தில் முறைகேடாக தாது மணல் எடுப்பதாக புகார் சிறப்பு குழுவின் ஆய்வு பணி நாளை தொடங்குகிறது தமிழக அரசு அறிவிப்பு