Quantcast
Channel: Bharatkalyan97
Viewing all articles
Browse latest Browse all 11039

சரஸ்வதி: ஒரு நதியின் மறைவு உயிர்த்தெழும் சரஸ்வதி Sarasvati, the disappearance, reborn river

$
0
0
4நவ
2014 
15:59
பதிவு செய்த நாள்
நவ 14,2014 15:55
சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியத் துணைக்கண்டத்தில் அசாதாரணமான பல சம்பவங்கள் நடந்தேறின. அதன் வட மேற்குப் பகுதி வறட்சியின் பிடியில் சிக்க ஆரம்பித்தது. மண் அரிப்பும் நில நடுக்கங்களும் சேர்ந்து கொள்ளவே அங்கு பாய்ந்த நதிகளின் பாதைகள் தாறுமாறாக ஆகின. அவற்றில் ஒன்று என்றென்றைக்குமாக மறைந்துபோனது. அதுதான் வேதங்களிலும் மகாபாரதத்திலும் வெகுவாகப் புகழப்பட்டிருக்கும் சரஸ்வதி நதி.

புவியியல் மற்றும் தட்பவெப்பவியல் ஆய்வுகள் சமீப காலங்களில் அந்த நதியின் பரிணாம வளர்ச்சியை வெகு துல்லியமாக முன்வைத்திருக்கின்றன. செயற்கைக்கோள் புகைப்படங்கள் நதியின் மறைந்துபோன தடத்தை அடையாளம் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கின்றன. ஐஸோடோப்பு ஆய்வுகள். அந்தத் தார் பாலைவனத்தில் சரஸ்வதி நதியின் புராதன நீர் இன்றும் பூமியின் அடி ஆழத்தில் தேங்கிக் கிடப்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றன.

சரஸ்வதி நதியை மீட்டெடுப்பதன் வாயிலாக இந்திய வரலாற்றின் ஒரு முக்கிய பாகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது இந்தப் புத்தகம்.
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

15நவ
2014 
07:49
பதிவு செய்த நாள்
நவ 15,2014 07:38

காவிய நதியான சரஸ்வதி நதியைப் பற்றிய ஆராய்ச்சிகள் இன்று எந்த நிலையில் இருக்கின்றன என்பதை வெகு ஜனத் தளத்துக்குக் கொண்டு செல்வதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம். பல்வேறு துறைகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இருந்து, மிக அதிக நம்பகத்தன்மை கொண்ட முடிவுகளை அடிப்படையாகக் கொண்டே என் வாதங்களை முன் வைத்திருக்கிறேன்.
இந்தியா தொன்மக் கதைகளை நேசிக்கும் தேசம். இந்த தேசத்தின் அனைத்து இலக்கியப் பிரதிகளிலும் வாய்மொழிக் கதைகளிலும் இவையே நிறைந்து காணப்படுகின்றன. தொன்மக் கதைகள் என்பதன் மூலம் கதாநாயக சாகசங்களையும் தெய்விக அற்புதங்களையும் கலந்து நெய்யும் சிக்கலான, பல அடுக்கு கொண்ட பெருங்கதையாடலையே குறிப்பிடுகிறேன். வலுவான குறியீடுகள் மூலம் மக்களின் மனங்களில் குறிப்பிட்ட மதிப்பீடுகளை அவை பதிய வைக்கின்றன. காலப்போக்கில் அவை மக்களுடைய பழக்க வழக்கங்களுடனும் பாரம்பரியத்துடனும் இரண்டறக் கலந்துவிடுகின்றன. இன்றைக்கும் கூட இந்தியாவின் வடகிழக்கில் வசிக்கும் சில பழங்குடியினர் ராமாயணத்திலிருந்தும் மகாபாரதத்திலிருந்தும் சில காட்சிகளை நிகழ்த்திக் காட்டுவதுண்டு. அரண்மனைக்குப் பதிலாக மூங்கில் குடிசைகள்தான் இருக்கும் என்றாலும் அலங்காரங்கள் அல்ல, அடிப்படை விஷயமே முக்கியம்.
இந்தத் தொன்மக் கதைகளுக்கு வரலாற்று அடிப்படை இருக்கலாம். அல்லது இல்லாமலும் போகலாம். ஆனால், அவை வடிவமைத்து உருவாக்கிய மனங்களில் வாழும் அல்லது செயல்படும் வரையிலும் அது 'உண்மையே'. எப்போதோ பிரளயம் நடந்தது, கடலைக் கடைந்தது, கங்கை பூமிக்கு இறங்கி வந்தது, வானரப்படை இலங்கைக்குப் பாலம் அமைத்தது, கிருஷ்ணன் கோவர்த்தன மலையைச் சுண்டுவிரலால் தூக்கிப் பிடித்தது ஆகிய அனைத்துமே அந்தவகையில் உண்மையே. நமது வரையறைக்குட்பட்ட அர்த்தத்தின் படி அவை 'உண்மையில் நடந்தவையா'என்பது பொருட்டே அல்ல. தொன்மமானது உண்மையான வரலாற்றுச் சம்பவத்திலிருந்து உருவாகியிருந்தாலும் இல்லாவிட்டாலும் அது வரலாற்றை உருவாக்கவே செய்கிறது
கிரேக்கமோ பாலினீசியனோ இந்தியத் தொன்மமோ எதுவாக இருந்தாலும் பழங்கால அல்லது பாரம்பரிய சமுதாயங்களில் அவை செலுத்திய தாக்கத்தை நம்முடைய நவீன மனங்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில், இன்றைய சமூகங்கள் 'தொன்மங்கள் அற்றவை'. நல்லதோ கெட்டதோ நம் அக உலகங்களில் இருந்து அவற்றை அகற்றிவிட்டோம். 'மித்'என்ற சொல்லுக்கு கிரேக்க மொழியில் 'வார்த்தை'அல்லது 'பேச்சு'என்று பொருள். சமஸ்கிருதத்தில் 'வாக்'என்று சொல்லப்படுவதற்கு இணையானது. ஆனால், இன்று அதை கட்டுக்கதை, திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நீதிக்கதை அல்லது கூட்டு நனவிலி என்ற பொருளைத் தரும்படியாக ஆக்கிவிட்டோம்.
நமது இந்தப் புத்தகம் மிகவும் தொன்மையான இந்தியப் படைப்பான ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் 'தொன்ம'நதியில் இருந்து ஆரம்பிக்கிறது. மகாபாரதம் உட்படப் பிந்தைய இலக்கியங்களில், சரஸ்வதி நதி மெல்ல 'மறைந்து கொண்டிக்கும்'ஒன்றாகவும் கடைசியில் 'கண்ணுக்குத் தெரியாததாகி'விடுவதாகவும், கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் இடத்தில் அவற்றுடன் இணைந்து விடுவதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் பிறகு, அது இன்று நாம் அறிந்திருக்கும் சரஸ்வதி தெய்வமாகிவிடுகிறது.
இந்தத் தொன்மமானது வெறும் கற்பனையான ஒன்றல்ல. ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் 'பிரமாண்ட நதி'யானது பண்டைய இந்தியாவின்* வடமேற்குப் பகுதிகளில் பாய்ந்து, இப்போது வறண்டு போயிருக்கும் நதியோடு, அதாவது சிந்து நதிக்கு இணையாக, அதற்கு சற்றே தென் திசையில் ஓடிய நதியோடு பெரும்பாலான நிபுணர்களால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. 'மறைந்து போன'இந்த நதியைக் கண்டுபிடிக்க மேற்கொண்ட தேடல் முயற்சிகள், இதுவரை மக்களுக்கு முழுவதாகச் சொல்லப்படவே இல்லை.
சரஸ்வதியை சமீபத்தில் செயற்கைக்கோள் புகைப்படங்களின் உதவியுடன் தான் 'மீண்டும் கண்டுபிடித்தோம்'என்ற எண்ணம் மக்களிடையே நிலவுகிறது. இது தவறு. மாறாக, பிரிட்டிஷ் நிலவியல் ஆய்வாளர்களும் அன்றைய பிரிட்டிஷ் அரசின் சிவில், ராணுவ அதிகாரிகளும் இந்தப் பகுதியில், அதாவது இன்றைய ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களிலும், பாகிஸ்தானில் உள்ள கோலிஸ்தான் பாலைவனத்திலும் 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஆய்வு செய்திருக்கின்றனர். அவர்கள் சரஸ்வதி ஆற்றின் படுகையை மட்டுமல்லாமல் அதன் இரு கரைகளிலும் ஏராளமான, சிதிலம் அடைந்துள்ள குடியிருப்புகளையும் கண்டுபிடித்துள்ளனர்.
இன்று வறண்டு, ஆள் நடமாட்டமில்லாமல் இருக்கும் இந்தப்பகுதி ஒரு காலத்தில் மிகச் செழிப்பாக இருந்திருக்கும் என்பதன் மவுன சாட்சிகள் அவை. உண்மையில், 1850-களிலேயே அந்த 'தொன்ம நதி'யின் வழித்தடம் இந்தியவியலாளர்களுக்குச் சந்தேகமறத் தெரிந்திருந்தது. இந்தக் குடியிருப்புகள் ஹரப்பா அல்லது சிந்து சமவெளி நாகரிகக் காலத்தைச் சேர்ந்தவை என்பது பல ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கலாசாரத்தின் பல அம்சங்கள், அங்குள்ள நகரங்கள் அழிந்த பின்பும் கூடத் தொடர்கின்றன. சில நகரங்கள் ஆச்சரியப்படும் வகையில் இன்றும் உயிர்ப்புடன் இருக்கின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை அகழ்வாராய்ச்சிகளிலிருந்து கிடைத்த விஷயங்களையும் புராதன இலக்கியங்களில் சொல்லப்பட்ட செய்திகளையும் ஒருங்கிணைப்பது முடியாத செயலாக இருக்கிறது. அகழ்வாராய்ச்சியாளர்கள் அப்படி ஒப்பிட்டுப் பார்ப்பதை மோசமான செயலாகக் கருதி அதில் ஈடுபடுவதில்லை. இலக்கிய அறிஞர்கள் இலக்கியங்களில் இருந்து உருவாக்கும் சித்திரத்துடன் அகழ்வாய்வுத் தரவுகளைப் பொருத்திப் பார்க்க முயற்சி செய்வதே இல்லை. சரஸ்வதி நதியைப் பொறுத்தவரையில், இந்த இரண்டு துறைகளுக்கு இடையில் ஆச்சரியப்படும் வகையிலான ஒத்திசைவுகள் இருக்கின்றன.
ஆக, அந்த நதி பாய்ந்தது உண்மை என்று நிரூபணமாகிவிட்ட தென்றால் நாம் அதற்கு முன்புவரை நம்பிவந்த சரித்திரத்தை அதற்கு ஏற்ப மறுபரிசீலனை செய்வது தானே முறை. ஆனால், துரதிருஷ்டவசமாக ஆரியப் படையெடுப்பு அல்லது ஆரிய இடப்பெயர்வு என்ற கோட்பாட்டுக்குள் சரஸ்வதி நதி சிக்கிக் கொண்டு விட்டது.
சரஸ்வதி பற்றிக் கிடைத்திருக்கும் அகழ்வாராய்ச்சித் தகவல்கள் ஆரியப் படையெடுப்பு என்ற ஒன்று நடந்திருக்க வாய்ப்பு இல்லை என்பதையே உணர்த்துகின்றன. சிந்து சமவெளி நாகரிகம் என்று நாம் இன்று சொல்லும் நாகரிகம் உண்மையில் சிந்து - சரஸ்வதி நதிச் சமவெளியின் நாகரிகமே. சரஸ்வதி நதி இயற்கைக் காரணங்களால் வற்றியதைத் தொடர்ந்தே சிந்து சமவெளி மக்களில் சிலர் தென்னிந்தியா நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். எஞ்சியவர்கள் கங்கைக் கரை நோக்கி இடம்பெயர்ந்திருக்கிறார்கள். ஆரியர்கள் என்று யாரும் வெளியில் இருந்து வரவில்லை.
சிந்து சமவெளியில் கிடைத்த அகழ்வாராய்ச்சிப் பொருட்களுக்கும் திராவிடர்களுக்கும் இருப்பதைப் போலவே வேத கால நாகரிகம் என்று சொல்லப்படும் கங்கைச் சமவெளிப் பகுதியில் கிடைத்த அகழ்வாராய்ச்சிப் பொருட்களுக்கும் இடையிலும் மிகுந்த ஒற்றுமை இருக்கின்றன. வேத நாகரிகம் என்பது சிந்து சமவெளி நாகரிகத்தை அழித்துப் பிறந்ததல்ல, அதன் நீட்சியே என்பதுபோன்ற பல உண்மைகளை சரஸ்வதி நதியின் கண்டுபிடிப்பு தெரிவிக்கிறது. இது இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் பலருடைய இருப்பை அடியோடு நிர்மூலமாக்கிவிடும். காலடியில் இருக்கும் நிலம் திடீரென்று இல்லாமலாகி அதலபாதாளத்தில் அலறியடித்தபடியே அவர்கள் விழவேண்டிவந்துவிடும். என்ன செய்ய... ஆரய்ச்சி சூரியன் உதித்தால் புரட்டு இருள் மறைந்துதானே ஆகவேண்டும்.
வாருங்கள், அசத்தியத்திலிருந்து சத்தியத்தை நோக்கி, இருளில் இருந்து ஒளியை நோக்கி, அழியும் பொய்யிலிருந்து அழியா உண்மையை நோக்கி நம் பயணத்தைத் தொடங்குவோம்.

மாற்றம் செய்த நாள்

20நவ
2014 
11:33
பதிவு செய்த நாள்
நவ 20,2014 11:25

சில வருடங்களுக்குமுன் பிபிசி, 'இந்தியாவின் அதிசய நதி'என்ற ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. சரஸ்வதி நதியின் வறண்ட படுகை ராஜஸ்தான் பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அது 'ஒரு கற்பனை நதியாக இருந்திருக்க முடியாது என்பதற்கு ஆச்சரியமூட்டும் புதிய சாட்சியங்கள் இருக்கின்றன'என்றும் பிபிசி அறிவித்தது.
1990களிலிருந்து இந்தியச் செய்தித்தாள்களில் இப்படிப்பட்ட கட்டுரைகள் நிறைய இடம்பெற்றன. இதனை வாசித்த பொதுமக்கள் இந்தத் 'தொன்ம நதி'மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது என்று நம்பத் தொடங்கினர். இது தொடர்பான முக்கியமான சில சாட்சியங்கள் கடந்த இருபது, முப்பது ஆண்டுகளில்தான் நமக்குக் கிடைத்துள்ளன. எனினும், உண்மையில் இந்த நதியைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணி கடந்த இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வந்திருக்கிறது.
'பிரிட்டிஷ் ராஜ்'ஜை ஒருவர் பல காரணங்களுக்காகக் குறை கூறலாம். ஆனால் புதிதாகக் கையகப்படுத்தப்பட்ட 'சாம்ராஜ்ஜியத்தின் மணிமகுடத்தை'ப் பற்றிய ஆவணங்களைப் பதிவுசெய்வதில் முழுமையைக் கடைப்பிடிக்கவில்லை என்று மட்டும் சொல்லவே முடியாது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆரம்பித்து நில அளவையாளர்களும், புவியியலாளர்களும், இயற்கை விஞ்ஞானிகளும், கல்வியாளர்களும், அரசு நிர்வாகத்தினரும் ராணுவ அதிகாரிகளும் இந்த மாபெரும் இந்தியத் துணைக்கண்டத்தின் மூலை முடுக்குகளுக்கும் சென்றிருக்கிறார்கள். அறிக்கைகள், கட்டுரைகள், கெஸட்டியர்கள், புத்தகத் தொகுப்புகள் என அந்தக் காலகட்டம் பற்றிய பெரு மதிப்பு வாய்ந்த ஏராளமான ஆவணங்களை விட்டுச்சென்றிருக்கிறார்கள். அற்பமான புல், பூண்டுகளில் ஆரம்பித்து வானளாவ உயர்ந்து நின்ற மலை உச்சிவரை எதுவும் அவர்களுடைய கழுகுக்கண்களில் இருந்து தப்பவில்லை.
அப்படியாக, நமக்குத் தேவையான அந்தப் பகுதியைப் பற்றிய சில ஆரம்பகட்ட ஆய்வு விவரங்கள் நமக்குக் கிடைத்துள்ளன: கிழக்கே 900 முதல் 2,300 மீட்டர் வரை உயரமுள்ள, ஷிவாலிக் மலைத்தொடர் என்று அழைக்கப்படும் இமயமலையின் அடிவாரப்பகுதி; மேற்கே இன்றைய ஹரியானா, பஞ்சாப் மாநிலங்கள்; ராஜஸ்தானின் வடமேற்கு எல்லையிலுள்ள பாலைவனம்; இதன் தொடர்ச்சியாக இன்றைய பாகிஸ்தானிலுள்ள கோலிஸ்தான் பாலைவனம்; கடைசியில் சிந்து நதியும், அதன் கிளைகளும் பாய்ந்தோடும் பகுதிவரை அனைத்து இடங்கள் பற்றிய விவரங்களும் இன்று நமக்குக் கிடைத்துள்ளன.
இந்தப் புத்தகத்தில் காணப்படும் பெரும்பாலான காட்சிகள் மேற்கண்ட பின்னணியில்தான் விரியப்போகின்றன. இன்று வறண்டு காணப்படும் இந்த மாபெரும் நிலப்பரப்பு தான் பற்பல வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த சம்பவங்கள் நடந்தேறிய பகுதி. வரலாற்று காலத்துக்கு முந்தைய சம்பவங்களும் இங்கு நடந்திருப்பது ஆய்வாளர்களுக்கு விரைவில் தெரியவந்தது.

வேத ஸ்லோகங்களின் அடிப்படையில் இந்தியாவின் வடமேற்கிலுள்ள ஆதிகால மக்கள், பூமி சாஸ்திரம் மீதான ஓர் ஆய்வு (A study on the Geography and the primitive people of lndia's north west, According to vedic Hymns) என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தில் ரிக் வேத ஸ்லோகங்களில் சொல்லப்பட்டதையும் பிரிட்டிஷார் புதிதாகக் கையகப்படுத்தியிருக்கும் நிலப்பரப்பின் சர்வேக்களையும் ஒருங்கிணைக்க வேண்டுமென்று முதல் முறையாக யோசனை கூறப்பட்டது.
அகாதெமி தெ இன்ஸ்கிரிப்ஷன் எ பெல்ஸாட்ர அமைப்புக்கு முன் 1885ல் சமர்ப்பிக்கப்பட்ட அந்த ஆய்வுக்கட்டுரைக்கு பரிசு கிடைத்தது. 1860ல் அது வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்துக்கு எழுதிய முன்னுரையில் விவியன் தெஸான் மார்த்தான் 'எங்களுடைய முதல் முழு கவனமும் சமஸ்கிருத படைப்புகளில் இடம்பெற்றுள்ள புவியியலை ஆராய்வதிலேயே செலவிடப்பட்டது. மிகவும் தீவிரமான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டிய பகுதியாக இருந்த அது, கிட்டத்தட்ட கன்னி முயற்சியாகவே இருந்தது. இடைவெளியே இல்லாமல் பத்து வருடங்கள் தீவிரமாகத் தொடர்ந்து முயற்சித்தும்கூட எங்களால் அந்த விஷயத்தைப் பற்றி முழுவதாக ஆராய்ந்து முடிக்க முடியவில்லை. இருப்பினும் வரலாறு, அகழ்வாராய்ச்சி ஆகிய ஆய்வுகளுக்கு நாங்கள் இந்தியாவின் புராதன புவியமைப்பு தொடர்பாக உருவாக்கித் தந்திருக்கும் இந்த மிக விரிவான படைப்பு மிகவும் பக்கபலமாக அமையுமென்று நம்புகிறோம்'என்று எழுதினார்.
விவியனின் நம்பிக்கைகள் பூர்த்தியாகின. ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள நிலப்பரப்பையும் வடமேற்குப் பிரதேசத்தின் நிலப்பரப்பையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது அவருடைய புத்தகம் எடுத்துக்கொண்ட விடை தெரியா வினாக்களில் சரஸ்வதி நதி பற்றியதும் அடங்கும். மறைந்துபோன சரஸ்வதி நதியை இந்தியாவின் வரைபடத்தில் எந்த இடத்தில் காண்பிக்கவேண்டும்? நமக்கு மிகவும் முக்கியமான அந்தக் கேள்வி தொடர்பான விவியனின் அணுகுமுறை மிகவும் நேரடியானது.
விவியன் சொல்கிறார்: சரஸ்வதி நதிதான் 'வேத ஸ்லோகங்களில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பெரிதும் மதித்து, வானளாவப் புகழ்ந்து சொல்லப்பட்டிருக்கிறது'என்று சரியாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதுவே 'முழுவதுமாக வேத காலப் பகுதிகளில் இடம் பெறும் முதல் நதி'. பாரம்பரிய நம்பிக்கைகளின்படி, இதன் கரையில்தான் வேத பாடல்கள் சேகரிக்கப்பட்டு நான்கு வேதங்களாக வியாஸ மஹரிஷியால் தொகுக்கப்பட்டன.
சர்சுதி என்ற அழைக்கப்படும் அத்தனை முக்கியமல்லாத சிற்றாறைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, விவியன் இவ்வாறு தொடர்கிறார்:
'இந்த நதி சமவெளியைப் பார்த்தபடியிருக்கும் (அதாவது ஷிவாலிக் மலை) கடைசி செங்குத்தான சரிவுகளின் அடிவாரத்தில் ஜம்னா நதிக்கும் யமுனை நதிக்கும் சட்லெட்ஜுக்கும் சட்லெஜுக்கும் இடையேயுள்ள குறுகிய நிலப்பரப்பில் உற்பத்தியாகிறது.'
இந்தச் செய்தியும் சரிதான். இன்றும்கூட 'சர்சுதி'என்ற பெயரில் ஒரு மழைக்காலச் சிற்றாறு ஓடுகிறது. சரஸ்வதி தான் மருவி 'சர்சுதி'யாகிவிட்டது என்பது மிகத் தெளிவாகதெரிகிறது (சீர்ஸா நகரம் கூட மத்திய காலங்களில் 'சர்சுதி'என்று அழைக்கப்பட்டிருந்ததை முன்பே பார்த்திருக்கிறோம்). 1788லேயே சர்வேயர் ஜெனரல் ரென்னெல் இந்தச் சிற்றாறை 'இந்துஸ்தானத்தின் வரைபட'த்தில் சர்சூட்டி (அல்லது செராஸ்வட்டி) என்ற பெயரில் அடையாளம் காட்டியிருக்கிறார்.
அதாவது, சர்சுதி நதி ஷிவாலிக் மலைத் தொடரின் ஓர் அங்கமான சிர்மூர் மலையில் உற்பத்தியாகி, இன்றைய ஆதி பத்ரி* தானேஷ்வர், குருக்ஷேத்ரா ஆகியவற்றைத் தாண்டிப் பாய்கிறது. வழியில் பெஹோவா என்ற இடத்தில் பருவ மழைகளால் நிறையும் மார்க்கண்டா நதி இதனுடன் வந்து கலக்கிறது. கடைசியில் இந்த நதி பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிடையே உள்ள ரஸூலா என்ற கிராமத்தினருகில் கக்கர் நதியுடன் சேர்கிறது. துல்லியமாகச் சொல்வதானால், கராக் (கத்தியால் மாவட்டம், ஹரியானா) மற்றும் சத்ரானாவுக்கும் (பட்டியாலா மாவட்டம், பஞ்சாப்) நடுப்பகுதியில் கலக்கிறது. படம் 1.3ல் 1862ல் வரையப்பட்ட படத்தில், சர்சுதி நதியின் படுகை குறிக்கப்பட்டிருந்தது (இன்று பெரும்பாலான வரைபடங்கள் சரஸ்வதி* என்றே அழைக்கின்றன). சமீபகாலம் வரையில் இந்திய அரசின் அதிகாரபூர்வ வரைபடங்கள் அந்தச் சிற்றாறை சரஸ்வதி நலா அல்லது 'சரஸ்வதி நதி'என்றுதான் குறிப்பிட்டு வந்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ஐ.எஸ்.ஆர்.ஓ) ஏற்பாடு செய்த குழு சுட்டிக்காட்டியிருப்பதுபோல், அந்த வறண்ட படுகை வழியாகச் செல்லும் பழைய ரயில் மற்றும் தரைவழிப் பாலங்களில் இந்தப் பெயர்கள் இப்போதும் காணப்படுவது ஓர் காரணமாக இருக்கலாம்.
'இந்தியாவின் மேற்குக் கோடியில் பாய்ந்தோடும் பிரதான நதிக்கு சரஸ்வதி என்று பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனினும், மலைப் பிரதேசங்களிலிருந்து தனித்தனியாக ஓடி, பிறகு ஒன்று சேரும் சிறு நதிகள் அனைத்துக்கும் கொடுக்கப்பட்ட பொதுவான பெயராகவும் அது இருந்திருக்கலாம் என்று விவியன் சொல்வதில் இருந்து அவருடைய பூகோள அறிவுக்கூர்மை வெளிப்படுகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நாம் இதுவரை பார்த்த மேற்கிலிருந்து கிழக்காக ஓடும் கக்கர், மார்க்கண்டா (டாங்ரி நதியையும் இந்த இரண்டுக்கும் இடையில் சேர்த்துக்கொள்ளவேண்டும்) சர்சுதி, சௌதங், இவற்றின் கிளை நதிகள் ஆகிய அனைத்துமே ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள சரஸ்வதி நதியின் மிச்சங்கள்'என்றுதான் கருதுகிறார் (சௌதங் நதியை த்ருஷத்வதி நதியுடன் பிற்பகுதியில் அடையாளப்படுத்திப் பார்க்கப்போகிறோம்).

மாற்றம் செய்த நாள்

24நவ
2014 
07:59
பதிவு செய்த நாள்
நவ 24,2014 07:51

'இம்பீரியல் கெஸட்டியர் ஆஃப் இந்தியா'வில் 'கக்கர்'என்ற தலைப்பில் எழுதப்பட்ட குறிப்பு சரஸ்வதி நதியின் போக்கை விவரித்திருந்தது. கூடவே இன்னொரு தகவலையும் குறிப்பிட்டிருந்தது:
'பண்டைய காலங்களில் கக்கர் நதியின் கீழ்ப்பகுதியானது பட்டியாலாவில் அதனுடன் இணையும் நதியான சர்சுதி அல்லது சரஸ்வதி என்ற பெயரில் அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. அப்போது அது ஒரு முக்கியமான நதியாக இருந்தது. எனினும், இப்போது அதன் நீர் பாசனத்துக்காகத் திருப்பிவிடப்பட்டுள்ளது. அம்பாலாவில் மட்டும் 10,000 ஏக்கர் நிலத்துக்கு இந்த நதியின் நீர்தான் பாய்ச்சப்படுகிறது. நதியின் கீழ்ப்பகுதியில் சீர்ஸா மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் முதல் ஜூன் வரை இந்த கக்கர் நதிப்படுகையில் நீர் வறண்டு போய்விடும். அந்தக் காலகட்டத்தில் நெல்லும் கோதுமையும் பெருமளவில் பயிரிடப்படுகிறது.'
'பஞ்சாபின் புனித நதி ஆரம்பகால பிராமணிய ஆவணங்களில் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது'என்ற விஷயத்தை எடுத்துக்கொண்டு பார்ப்போம். 'இந்த நதி சிர்மூர் குன்றுகளில் உற்பத்தியாகி இந்துக்கள் புனிதமெனக் கருதும் சத் புத்ரி (ஆத் பத்ரி) சமவெளிப்பிரதேசத்தை வந்தடைகிறது. கக்கர் நதியில் இணைவதற்கு முன் தானேசர் என்ற புனித நகரம், அதன் பின்னர் மகாபாரதத்தின் யுத்தகளமும் இந்துக்களுடைய தீர்த்தாடன க்ஷேத்ரமுமான குருக்ஷேத்ரம் ஆகியவற்றின் வழியாகப் பாய்கிறது.'
பண்டைய காலங்களில் கக்கரில் சங்கமித்த பிறகான கீழ்ப்பகுதி நதி சர்சுதி என்றே அழைக்கப்பட்டது. மலைப்பகுதிக்கு அருகில் பாசனத்துக்குப் பயன்படுத்தப்பட்ட பிறகும்கூட அது ராஜ்புதானா சமவெளிப் பிரதேசத்தில் பாய்ந்தது'என்று இம்பீரியல் கெஸட்டியர் மீண்டும் தெரிவித்திருக்கிறது.
பூகோள சாஸ்திரத்தின் மூலம் தெரியவந்ததையும் புராதன இலக்கியங்களில் சொல்லப்பட்டதையும் ஒன்றிணைத்துப் பார்த்த பிறகு, கெஸட்டியர் தொடர்கிறது: 'சரஸ்வதி நதிக்கரையில் ஆரம்ப கால ஆரியர்களின் குடியிருப்புகளில் சில அமைந்திருந்தன. இதனைச் சுற்றிலுமிருந்த இடங்களை வேத காலம் முதலே மக்கள் புனித பூமியாகக் கருதி வழிபட்டனர். இந்துக்கள் இந்த நதியைக் கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியுடன் இணைத்துப் பார்க்கின்றனர்.'
இப்படி அடையாளப்படுத்திக்கொள்வதற்கான காரணங்களைப் பின்னர் ஆராயலாம். அதற்கு முன்பு இந்தப் பகுதியின் நிலவியல் எப்படியிருந்தது என்பதையும், சரஸ்வதி நதி 'மறைந்து போன'தற்கான காரணங்களையும் பார்க்கலாம்.
1879ல் பிரிட்டிஷ் புவியியலாளர் ரிச்சர்ட் டிக்ஸன் ஒல்தாம் இந்திய புவி இயல் ஆய்வு நிறுவனத்தில் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 21. அவருடைய தந்தை தாமஸ் ஒல்தாம் அந்த நிறுவனத்தின் முதல் இயக்குநராக இருந்தார். ஆனால், விஞ்ஞான உலகம் தந்தையைவிட மகனையே பெரிதும் நினைவில் வைத்திருக்கிறது. குறிப்பு உதவிப் பணிகள், நினைவுக்குறிப்புகள், இந்திய புவியியல் சார்ந்த எண்ணற்ற ஆய்வுக்கட்டுரைகள் எழுதியதோடு மட்டுமல்லாமல் நிலநடுக்கங்களை ஆராய்வதிலும் ஒல்தாம் தேர்ச்சிபெற்றிருந்தார். 1897ல் அஸ்ஸாமில் வந்த நில நடுக்கம் ஷில்லாங்கைத் தரைமட்டமாக்கியபோது (அது அப்போது அந்த மாநிலத்தின் பகுதியாக இருந்தது) அவருக்கு இருந்த நில நடுக்கம் சார்ந்த அறிவு புவியின் உருகிய குழம்புப் பாறை அங்கு இருக்கிறது என்ற முடிவுக்கு அவரை இட்டுச்சென்றது. உடல் நலக் குறைபாடு காரணமாக ஒல்தாம், தன் 45வது வயதில் ஜி.எஸ்.ஐ.யில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் வெளியேறினார். எனினும், இங்கிலாந்தில் இருந்தபடியும் பிறகு ஃப்ரான்ஸின் தென் பகுதியில் இருந்தபடியும் தன் துறை சார்ந்து தொடர்ந்து பங்களிப்பு செய்துவந்திருக்கிறார்.
அதிக முக்கியத்துவம் பெறாத அவருடைய ஆய்வுகள்தான் நமக்கு இந்த இடத்தில் மிகவும் முக்கியம். நதியில் மேல் பகுதியில் (சரியாகச் சொல்வதானால், நதிப்படுகையின் மேல் பகுதியில்) அதாவது பவல்பூரிலிருந்து ஹிஸ்ஸார் வரையுள்ள பகுதியில் துணை ஆய்வாளராக ஒல்தாம் மேற்கொண்ட அந்த ஆய்வுகளின் முடிவுகளை இப்போது பார்க்கலாம். அவருக்கு புவியியல் துறை சார்ந்து இருந்த நிபுணத்துவம் பிற ராணுவ முன்னோடிகளைவிடக் கூடுதல் சாதகமான அம்சமாக இருந்தது.

1886ல் The Journal of the Asiatic Society of Bengalல் அவர் எழுதிய ஒரு கட்டுரையில் சரஸ்வதி நதி வறண்டு போனதற்கு அங்கு பெய்து கொண்டிருந்த மழையின் அளவு குறைந்ததுதான் காரணம் என்ற வாதத்தை நிராகரித்தார். ஏனெனில், அதுதான் காரணமென்றால், அந்தப் பகுதியிலிருந்த அனைத்து நதிகளையும் அது பாதித்திருக்க வேண்டும். ஆகவே, இந்தியப் பாலைவனத்தில் 'மறைந்த'நதி சரஸ்வதி அல்ல. மாறாக, அது சட்லெஜ்தான் என்றும், அது மேற்கே திரும்பி பியாஸ் (பீயாஸ்) நதியுடன் இணைந்த காரணத்தாலேயே 'காணாமல்'போயிற்று என்றும் ஒல்தாம் வாதிட்டார். இந்த சட்லெஜ் நதி ரூபார் (இந்திய பஞ்சாப் பகுதியில் சண்டிகருக்கு அருகில் இருக்கும் ரூபார் அல்லது ரூப்நகர்) அருகே மேற்கு திசையில் சட்டென்று வளைந்து செல்கிறது. இந்த நதியையும் ஐம்பது கி.மீ கிழக்கிலுள்ள கக்கரையும் இணைக்கும் ஒரு புராதன நதியின் படுகை காணப்பட்டது. இந்தக் காரணங்களால் ஒல்தாமின் விளக்கம் சரிதான் என ஒப்புக்கொள்ளப்பட்டது.
மேலும், வேதகாலத்தில் யமுனை நீரின் ஒரு பகுதி கக்கர்ஹக்ரா நதிப்படுகையில் பாய்ந்திருக்கலாம் என்றும் ஒல்தாம் எண்ணினார். 'மலையிலிருந்து சமவெளிக்கு வந்த ஜமுனை (யமுனை) நதி இரண்டாகப் பிரிந்திருக்கலாம். பஞ்சாப் பக்கம் திரும்பி ஓடிய கிளைக்கு சரஸ்வதி என்றும், கங்கை நதியில் சங்கமித்த நதிக்கு யமுனை என்றும் பெயரிடப்பட்டிருக்கலாம்.'சட்லெஜும் யமுனையும் வழிமாறி ஓடியதால் சரஸ்வதி நதிக்குப் போதிய நீர் கிடைக்கவில்லை. இந்தக் காரணத்தாலேயே 'அந்தப் பகுதியிலிருந்த நீர்நிலைகளில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன'என்று ஒல்தாம் தெரிவித்திருக்கிறார். வட இந்திய நதிகளின் தாறுமாறான போக்கே இதற்குக் காரணம். இதற்கு மிக சமீபத்திய எடுத்துக்காட்டாக அவர், 19ம் நூற்றாண்டின் ஆரம்பகட்டத்தில், பிரம்மபுத்ரா நதி கங்கையுடன்இணையுமிடத்துக்குச் சற்று மேலாக (இன்றைய பங்களாதேஷில்) வழிமாறி ஓடியதைக் குறிப்பிடுகிறார். வட இந்திய நதிகள் இப்படி அடிக்கடித் தடம் மாறி ஓடுவதற்குக் காரணம் முழு கங்கைச் சமவெளிப் பிரதேசமும் பெரிதும் சம தளமான படுகையாக இருப்பதுதான். இதன் விளைவாக அந்தப் பகுதியில் மணல் படுகைகள் உருவாவதும் நில அரிப்பும் பெரிய அளவில் நடந்தேறின. இதனாலேயே அந்தப் பகுதியில் நதிகள் அடிக்கடித் தடம் மாறின. இம்மாதிரியான நிகழ்வுகள் தக்காணப் பீடபூமியில் அதிகமாகக் காணப்படுவதில்லை.

ஒருவகையில் ஒல்தாம், பொ.யு.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்ட்ராபோ என்ற கிரேக்க அறிஞர் சொன்னதையே மேற்கோள்காட்டியிருக்கக்கூடும். புராதன உலகம் பற்றி ஸ்ட்ராபோ எழுதிய 'ஜியாக்ரஃபி'என்ற புத்தகத்தை மிஞ்சும்படியான ஒன்றைப் பல நூற்றாண்டுகள்வரை யாரும் எழுதியிருக்கவில்லை. வடமேற்கு இந்தியாவைப் பற்றி எழுதும்போது பல்வேறு கிரேக்க வரலாற்றாசிரியர்களின் படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டிருக்கிறார். மாவீரன் அலெக்ஸாண்டருடன் இந்தியாவுக்கு வந்த அரிஸ்டோபுலஸ் (அணூடிண்tணிஞதடூதண்) என்பவரும் அவர்களில் அடங்குவார். அவருடைய நூலை மேற்கோள் காட்டி ஸ்ட்ராபோ கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:
'ஏதோ ஒருவேலையாக அவர் (அரிஸ்டோபுலஸ்) சென்றபோது, மிகப் பெரியதொரு நிலப்பரப்பைப் பார்த்ததாகச் சொல்கிறார். அதில் யாருமே வசிக்காத ஆயிரக்கணக்கான நகரங்களும் அதன் கிராமங்களும் இருந்தன; இதற்குக் காரணம் சிந்து நதி தனது வழக்கமான பாதையை விட்டுவிட்டு, இடது பக்கமாக மிகவும் ஆழமான வழித்தடத்தில் திரும்பிச் சென்றதுதான். இதன் விளைவாக சிந்து நதியின் வலது கரைப்பக்கங்களில் நீர்வரத்துக் குறைந்தது; புதிய வழித்தடத்துக்கு மேலாக ஓடிய வெள்ளங்களினால் உருவானதாகவும் புதிய வெள்ளங்களுக்கும் மேலான படுகையாகவும் அது இருந்ததால், நதியின் நீர் அங்கு பாயவில்லை.'
சிந்து நதியின் வலது கரைப்பக்கம் எப்படி மேடாக மாறியது? ஸ்ட்ராபோ இதற்கான காரணத்தை சாதுரியமாக யூகித்திருக்கிறார். 'இந்தியாவில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் நிலமானது துவாரங்கள் மிகுந்ததாகவும் விரிசல் மிகுந்ததாகவும் ஆகிவிடுகிறது. இதன் மூலம் பூகம்பங்கள் அதிக அளவில் நிகழ்கின்றன. அப்போது நதிகளின் போக்கும் மாற்றிவிடுகிறது.'பூகம்பங்கள் நிகழ்வது பற்றிய ஸ்ட்ராபோவின் கற்பனை அதிகப்படியானதுதான். ஆனால், இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் நிகழும் பூகம்பங்கள் அங்கு ஓடும் நதிகளின் போக்கையே மாற்றிவிடுகின்றன என்ற அவருடைய யூகம் மிகச் சரியாக இருந்தது. சொல்லப்போனால், சரஸ்வதி நதி (சிந்து நதியின் விஷயத்தில் இதை நாம் பார்த்தோம்) பாதை மாறியதற்கு இதுதான் காரணம் என்று இன்றைய புவியியல் அறிஞர்கள் முன்வைத்துவருகின்றனர்.

சரஸ்வதி: ஒரு நதியின் மறைவு

     சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியத் துணைக்கண்டத்தில் அசாதாரணமான பல சம்பவங்கள்

மேலும் படிக்க...
2

உயிர்த்தெழும் சரஸ்வதி

     காவிய நதியான சரஸ்வதி நதியைப் பற்றிய ஆராய்ச்சிகள் இன்று எந்த நிலையில் இருக்கின்றன என்பதை

3

சரஸ்வதி என்றொரு பெயர்

    சில வருடங்களுக்குமுன் பிபிசி, 'இந்தியாவின் அதிசய நதி'என்ற ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது.

மேலும் படிக்க...
4

நதிமூலத்தை ஆராய்வோம்

     'இம்பீரியல் கெஸட்டியர் ஆஃப் இந்தியா'வில் 'கக்கர்'என்ற தலைப்பில் எழுதப்பட்ட குறிப்பு




Viewing all articles
Browse latest Browse all 11039

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>